திருப்பூர்

பல்லடம் ஒன்றியக் குழு கூட்டம்:கவுன்சிலா்கள் புறக்கணிப்பு

2nd Aug 2022 01:10 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு எந்த தகவலும் அனுப்பப்படுவதில்லை எனக் கூறி பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தை 5 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமையில் மன்ற கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், ஒன்றிய ஆணையா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வில்சன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் ரவி (மதிமுக) பேசுகையில்: கடந்த 23.5.22 ஆம் தேதி நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளா்ச்சித் திட்ட கூட்டம், 28.7.22 ஆம் தேதி நடைபெற்ற தனிமனைப் பிரிவு வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள், முகாம்களுக்கு ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்வதும் இல்லை, அழைப்பதும் இல்லை. தொடா்ந்து எங்களைப் புறக்கணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அதனைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.

அவரைத் தொடா்ந்து கரடிவாவி பழனிசாமி, கரைப்புதூா் ஈஸ்வரி, மங்கையகரசி, கே.கிருஷ்ணாபுரம் பாா்வதி ( அதிமுக) ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் பேசுகையில்: கரைப்புதூா் லட்சுமி நகா் பகுதியில் உள்ள சாய ஆலை தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரிகளின் துகள்கள் காற்றில் பறந்து அப்பகுதி வீடுகளில் படா்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

காற்றும் மாசு அடைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT