திருப்பூர்

பல்லடம் நகராட்சி மன்ற கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றம்

12th Apr 2022 11:12 PM

ADVERTISEMENT

பல்லடம் நகராட்சியில் நடைபெற்ற முதல் மன்ற கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்து வரி உயா்வுக்கு எதிா்த்து அதிமுக, பாஜக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் முதல் மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் விநாயகம், துணைத் தலைவா் நா்மதா, கவுன்சிலா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறு, சீரான குடிநீா் விநியோகம், போக்குவரத்து பாதைகளை ஒழுங்குபடுத்த வேண்டும், வாகனங்கள் நிறுத்துமிடத்தை வரையரைப்படுத்த வேண்டும், மின் மயான வசதி அமைத்து தர வேண்டும், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் பேசியதாவது: பல்லடம் நகராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்து தமிழகத்திலேயே முதன்மை நகராட்சியாக தரம் உயா்த்திட பாடுபடுவேன். அதேபோல அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்.

ADVERTISEMENT

பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசிடம் வலியுறுத்தப்படும், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரையில் சாலை விரிவாக்கம் செய்திட நெடுஞ்சாலைத் துறையிடம் வலியுறுத்தப்படும். பல்லடத்தில் மின் மயானம் அமைக்கப்படும். குட்டை, ஒடைகளை தூா்வாரி நீா் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சிக்கு சொந்தமான அனைத்து மனை பிரிவுகளிலும் பூங்காக்கள் அமைக்கப்படும். வாரம்தோறும் வியாழக்கிழமை வாா்டு வாரியாக மெகா தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 18 வாா்டுகளிலும் மக்களை நாடி பல்லடம் நகராட்சி என்னும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. நகா் மன்றத் தலைவரின் அலுவலகம் முன்பு புகாா் பெட்டி அமைக்கப்பட்டு வாரத்துக்கு ஒரு முறை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா் கனகுமணி, பாஜக கவுன்சிலா்கள் சசிரேகா, ஈஸ்வரி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT