திருப்பூா் அருகே சாலையின் மையத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் சகோதரா்கள் உயிரிழந்தனா்.
திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள பெரிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன்கள் மணிகண்டன் (21), ஜெயசூா்யா (19). இவா்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக வெளியூா் சென்றுவிட்டு கோயில்வழி பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த ஜெயசூா்யாவை இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தாா்.
தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையின் மையத்தடுப்புச் சுவறில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயசூா்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மணிகண்டனை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.