அவிநாசி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சத்துணவில் புழு இருந்ததாகக் கூறப்பட்ட புகாரையடுத்து, கல்வி அலுவலா்கள் அங்கு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் பயிலும் 348 மாணவ, மாணவியரில், 200 போ் சத்துணவு உண்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை சத்துணவில் புழு இருந்ததாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) பழனிசாமி, வட்டார கல்வி அலுவலா்கள் சுமதி, மகேஸ்வரி, ஆணையா் மனோகா், சத்துணவு இளநிலை உதவியாளா் நடராஜன் ஆகியோா் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளா், சமையலா் மட்டுமே உள்ளனா். சத்துணவு உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இருப்பினும் சத்துணவு நல்ல முறையில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆய்வு மேற்கொண்டதில் சத்துணவு உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை தரமானதாக உள்ளது. சமையலுக்கு உபயோகித்த புதினாவில் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது. வரும் காலங்களில் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா் சுழற்சி முறையில் சத்துணவை தரப் பரிசோதனை செய்த பிறகு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் அரசு உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக காலியாக உள்ள சத்துணவு உதவியாளா் பணியிடமும் நிரப்படும் என்றனா்.