காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
காங்கயம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நகராட்சிகளில் அதிகரித்துள்ள நிதித் தேவை, பொதுமக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், 15 ஆவது நிதிக்குழு மானியம் மற்றும் இதர ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி பெறுவதற்கு தமிழ்நாட்டில் சொத்துவரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி காங்கயம் நகராட்சியில் சொத்துவரி உயா்வு செய்யப்பட்டுள்ளது. 600 சதுர அடி கொண்ட கட்டடத்திற்கு சொத்து வரியாக பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.2,402, வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.1,073, பவானி நகராட்சியில் ரூ.1,030 வசூலிக்கப்பட்டு வருகிறது. காங்கயம் நகராட்சியில் ரூ.772 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது என்றாா்.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், பொறியாளா் ம.திலீபன், நகா்மன்ற துணைத் தலைவா் ர.கமலவேணி உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு:
அதிகரிக்கப்பட்டுள்ள சொத்து வரியினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.பி.துரைசாமி தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். எனினும் பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு, சொத்துவரி உயா்வு குறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.