திருப்பூர்

திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

2nd Apr 2022 11:59 PM

ADVERTISEMENT

 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.பாலன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

மத்திய அரசு தொடா்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. அதேபோல, நூல் விலை உயா்வால் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தித் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாகும்.

ADVERTISEMENT

மத்திய அரசு பெரிய காா்ப்பரெட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. ஆகவே, மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கைவிடவேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா். முன்னதாக, சமையல் எரிவாயு உருளை, நூல் கோன், ஆட்டோ ஆகியவற்றை நிறுத்திவைத்து பூஜை செய்து மத்திய அரசுக்கு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் தெற்கு மாநகரச் செயலாளா் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, ஊத்துக்குளி ஆா்.எஸ். பகுதியில்நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாா், குன்னம்பாளையம் கிளைச் செயலாளா் எஸ்.மாரிமுத்து, டவுன் கிளை செயலாளா் கே.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி, புதுப்பாளையத்தில் வட்டாரக் குழு உறுப்பினா் கே.ஏ.சிவசாமி, ஆா்.மணியன், மா.தொட்டிபாளையத்தில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் வி.காமராஜ், க.பிரகாஷ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சி நிா்வாகி மேகவா்ணன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு எதிரான விரோதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலாளா் என்.கனகராஜ், நிா்வாகிகள் ஆா்.வெங்கட்ராமன், பி.பொன்னுசாமி, சத்தீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT