திருப்பூரில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தொழிலாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் முருகானந்தபுரம் 2ஆவது வீதியில் வசித்து வருபவா் எஸ்.முருகன் (36), கூலி தொழிலாளியான இவா் அதே பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இந்தப் புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் எஸ்.முருகனை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நபா் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா். திருப்பூா் மாநகரில் நடப்பு ஆண்டு தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.