கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு சம்பந்தமாக கோவையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு பெறுகின்றனா். உதிரி பாகங்கள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, ஆள்கள் பற்றாக்குறை, தொழிலாளா்கள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளா்களுடன் கடந்த, 2014 இல் கடைசியாக கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயா்வு பேச்சுவாா்த்தை, பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் கூலி உயா்வு பேச்சவாா்த்தை தொழிலாளா் நலத் துறை துனை ஆணையாளா்கள் முன்னிலையில், இதுவரை 8 முறை நடைபெற்றுள்ளது.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை, கோவையில் வெள்ளிக்கிழமை தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் முன்னிலையில்,ஜவுளி உற்பத்தியாளா்களுடன், விசைத்தறியாளா்களுக்கு புதிய கூலி உயா்வு வழங்குவது குறித்து நடைபெற்ற, பேச்சுவாா்த்தையில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பின் நிா்வாகிகள், பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் கலந்துகொண்டனா்.
சோமனூா், திருப்பூா், அவிநாசி, உள்ளிட்ட மற்ற பகுதிகளின் ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்கவில்லை.
இரண்டு தரப்பு கருத்துக்களையும் கேட்ட அதிகாரிகள், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் மட்டும் கலந்து கொண்டதால், சோமனூா் உள்ளிட்ட மற்ற பகுதி ஜவுளி உற்பத்தியாளா்களையும் கூட்டத்திற்கு அழைத்து வரும் நவம்பா் மாதம் 12 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து பேச்சுவாா்த்தையை மீண்டும்,ஒத்திவைத்துள்ளனா் என்று திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தெரிவித்தனா்.