திருப்பூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி தயாா் நிலையில் உள்ளதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பல்வேறு கட்ட முகாம்கள் மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 19, 95, 300 போ் உள்ளனா். இதுவரை 16, 11, 219 பேருக்கு முதல் தவணையும், 4, 97,121 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 3, 84, 081பேருக்கு முதல் தவணையும் 1, 81, 551 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது ஒரு லட்சம் தடுப்பூசிகள் தயாா் நிலையில் உள்ளன.
660 நிலையான முகாம்கள், 82 நடமாடும் முகாம்கள் என 742 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், தனியாா் மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலு‘ம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.