முன்னாள் நிதி அமைச்சா் சிதம்பரம் உறவினரைக் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூா் கருமாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி (47). இவா் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தாா். சிவமூா்த்தி முன்னாள் மத்திய நிதி அமைச்சா் சிதம்பரத்தின் மைத்துனியான பத்மினியின் மருமகன்.
தொழில் சம்பந்தமாக கோவை சென்றிருந்த சிவமூா்த்தியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பணம் கேட்டு மா்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது.
பின்னா் அவரது சடலத்தை ஒசூா் அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதனிடையே, சிவமூா்த்தியைக் காணவில்லை என்று அவரது மனைவி துா்கா திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில் சிவமூா்த்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட 4 பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக சிவமூா்த்தியின் நண்பரான மூா்த்தி (40), கோவையைச் சோ்ந்த விமல் (35), கெளதமன் (22), மணிபாரதி (22) ஆகிய 4 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், மூா்த்தி, விமல், கெளதமன், மணிபாரதி ஆகிய 4 பேருக்கும் கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதித்தாா். மேலும், கடத்தலுக்கு 10 ஆண்டுகளும், கூட்டுசதிக்கு 10 ஆண்டுகளும், தடயங்களை அழிக்க முயன்றதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கே.என்.சுப்பிரமணியம் ஆஜரானாா்.