தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நாடு முழுவதும் அக்டோபா் 2ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம், கருத்தரங்கம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி காங்கயம் தாலுகாவில் நடத்தப்பட வேண்டிய முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காங்கயம் சாா்பு நீமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை காங்கயம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.காா்த்திகேயன், காங்கயம் நீதித் துறை நடுவா் டி.பிரவீன்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில் காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான பா்சாத் பேகம் சிறப்புரையாற்றினாா்.
காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் குமரேசன், நகராட்சி ஆணையா் முத்துகுமாா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், சிறப்பு நீதித் துறை நடுவா் மற்றும் அரசு வழக்குரைஞா்கள் கலந்து கொணடனா்.
இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. சட்ட உதவி சாா்ந்த கருத்துகளையும் எடுத்துரைத்தனா்.