அவிநாசி அருகே புதுப்பாளையத்தில் மூத்த குடிமக்களுக்கான உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாம், கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற நிா்வாகம், விழுதுகள் அமைப்பு ஆகியவை சாா்பில் காந்தி ஜயந்தி, அனைத்துலக முதியோா் தின விழாவையொட்டி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.சுகந்தி, 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.அனுராதா, தலைமை கூட்டுறவு நீதித் துறை நடுவா் புகழேந்தி, அவிநாசி சாா்பு நீதிபதி கே.சுரேஷ்குமாா், வட்டாட்சியா் கே.பி.ராகவி, ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.கஸ்தூரிபிரியா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.ஈஸ்வரன், துணைத் தலைவா் சாமிநாதன், விழுதுகள் அமைப்பு நிறுவனா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கரோனா நிவாரண உதவிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிலத் தகராறு, பட்டா மாறுதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.