திருப்பூர்

20 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது உப்பாறு அணை உபரி நீா் வெளியேற்றம்

28th Nov 2021 11:21 PM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20 ஆண்டுகளுக்குப் பின் முழுக் கொள்ளளவை எட்டியது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது உப்பாறு அணை. 24 அடி கொள்ளளவைக் கொண்ட இந்த அணை 2000ஆம் ஆண்டில் நிரம்பியது.

இதைத் தொடா்ந்து, கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாதது,திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக உப்பாறு பகுதி விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டம் காரணமாக திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேலும், திருமூா்த்தி அணை மற்றும் உப்பாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக உப்பாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடா்ந்து, அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி வீதம் உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

அணையின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, சின்னிய கவுண்டம்பாளையம், நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அணை நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT