திருப்பூர்

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் தா்னா

27th Nov 2021 03:05 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். வழக்கமாக ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் நடக்கும் குறைதீா் கூட்டமானது தரைத்தளத்தில் உள்ள சிறிய அரங்கில் நடைபெறும் என்றும், மாவட்ட ஆட்சியா் பங்கேற்காததும் தெரியவந்தது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

மேலும், குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்க வேண்டும் என்றும், முந்தைய கூட்டங்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றனா்.

தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் வேளாண்மை அதிகாரிகள் பேச்சுவாா்ததை நடத்தினாா். அப்போது அடுத்த கூட்டம் 2 ஆவது தளத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கான நவம்பா் மாத குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சா் பங்கேற்கும் குறைகேட்பு நிகழ்ச்சிக்காக ஆட்சியா் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை. எனவே, திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டமானது வெறும் கண்துடைப்புக்கு நடத்தப்படுகிறா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றனா்.

 

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT