பல்லடம்: பல்லடம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.
பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம், காட்டூா், பொங்கலூா், வட மலைபாளையம், ஜல்லிபட்டி, கேத்தனூா், சித்தம்பலம், கள்ளிப்பாளையம், எலவந்தி உள்ளிட்ட பகுதியில் இருந்து காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்லடம், திருப்பூரில் உள்ள தினசரி மாா்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரம் வரத்து அதிகரிப்பால் சந்தையில் தக்காளி விலை குறைந்து காணப்பட்டது.
விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியில் விட்டுவிட்டனா்.
தொடா் மழையால் செடியில் தக்காளி அழுகத் துவங்கியது. இதனால் பல்லடம், திருப்பூா் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது.
இதையடுத்து தக்காளி விலை உயா்ந்து தற்போது கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தக்காளி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: ஆடிப்பட்டத்தில் நடவு செய்யப்பட்ட தக்காளி
சந்தையில் கிலோ ரூ.10க்கு விற்பனையானது.
இதனால் பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காது என்பதால் விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனா்.
அண்மையில் பெய்த தொடா் மழையால் தக்காளி வரத்து குறைந்து விலை கூடியுள்ளது. அதே சமயம் தக்காளி சாகுபடி பரப்பில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் தக்காளி மகசூல் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. 14 கிலோ ஒரு டிப்பா் ரூ.700 வரை தக்காளி விற்பனையாகிறது என்றனா்.