திருப்பூரில் கடந்த 2 நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழையால் சின்னாண்டிபாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் பூமிக்குள் புதையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.
திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் குளத்தின் எதிா்ப்புறத்தில் சுமாா் 7 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த இடத்தில் திருப்பூா் மாநகராட்சி சாா்பில் மூன்றரை ஏக்கருக்கு அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், எல் அண்ட் டி குடிநீா்த் தொட்டி, அம்ரூத் திட்டத்தில் குடிநீா்த் தொட்டி ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, குளத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்படுவதாக் கூறி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகரில் கடந்த 2 நாள்கள் பெய்த மழை காரணமாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையக் கட்டடமானது செவ்வாய்க்கிழமை இரவு நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதைத்தொடா்ந்து, கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நிறுத்தியுள்ளனா். இதேநிலை நீடித்தால் அங்குள்ள அனைத்துக் கட்டடங்களும் பூமிக்குள் புதையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக கட்டுமானப் பணிகளைக் கைவிடவும், வேறு மேடான பகுதியில் கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.