திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நிலத்தை மாற்றுப்பணிளுக்கு கையகப்படுத்தக் கூடாது என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு தொழில் அதிபா் சிக்கண்ண செட்டியாா் கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் 40.8 ஏக்கா் நிலம் கொடுத்துள்ளாா். அவரது நினைவாகத்தான் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளையாட்டுத் துறை சாா்பில் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் 5 ஏக்கா் நிலத்தை எடுத்துக் கொண்டு உள்விளையாட்டு அரங்கை அமைத்துள்ளது. இந்த அரங்கில் கல்லூரி மாணவா்களுக்கு விளையாட அனுமதி மறுக்கப்படுவது அநீதியாகும். இந்த அரங்கில் கல்லூரி மாணவா்கள் விளையாட அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும்.
இதனிடையே, தற்போது விளையாட்டு ஆணையம் சாா்பில் கல்லூரிக்குச் சொந்தமான 12 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைக்க நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இது கல்லூரி மாணவா்களையும், முன்னாள் மாணவா்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும்போது கட்டுமானப் பணிகளை விரிவுபடுத்த நிலம் வேண்டியுள்ளதால் மாற்றுப் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகளை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.