திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 3,438 படுக்கைகள்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

28th May 2021 03:41 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் 3,438 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் அறக்கட்டளை பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். இதன் பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி, இந்திய மருத்துவர்கள் சங்கம், தனியார் அறக்கட்டளை ஆகியன சார்பில் 36 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் 200 தனித்தனி படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், 2 மினி அவசர சிகிச்சை படுக்கை வசதிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பு, குழந்தைகள் பராமரிப்பகமும் செயல்படவுள்ளது. இந்த மையத்தில் சிகிச்சை பெரும் நபர்களுக்கு இப்பகுதி மக்கள், தொழில் அதிபர்கள் மூலமாக இலவச உணவும் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியன சார்பில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் மூலமாக 3,438 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தி நாளை திருப்பூர் மாவட்டத்தில் எங்கெங்கு தடுப்பூசி போடப்படும் என்பதை தெரிவிக்க உள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ள போதிலும், தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. ஆகவே, கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரி விடுதிலில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சிகளில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், நகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT