திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் சாமிநாதன் 

13th Jun 2021 06:25 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பல்லவராயன்பாளையத்தில் சேவாபாரதி, ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் ஶ்ரீராமசந்திரா மிஷன் வளாகத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா தொற்று சிகிச்சை மையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா பாரதி மாவட்ட தலைவர் டி.ஆர்.விஜயகுமார், ஹார்ட்புல்னெஸ் அமைப்பு பொறுப்பாளர் எச்.வி.குப்தா ஆகியோர் வரவேற்றனர். 
இவ்விழாவில் மிதமான கரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவச உணவு மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது. திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜனை பொறுத்த வரையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தேவையை தாண்டி உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே போல் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 410 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 100 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கை வசதிகளும் உள்ளது. 
தற்போது 317 ஆக்சிஜன் படுக்கை வசதியில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 193 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலியாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு தினசரி 2 ஆயிரம் என்ற அளவிற்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. தற்போது அது 800 நபர்களுக்கு என்ற அளவிற்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது முடக்க அறிவிப்பால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு சொல்கின்றபடி வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 
அடிக்கடி கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தை விட்டு கரோனாவை முழுமையாக விரட்டி அடிக்க முடியும். இப்பணியில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் ஒன்றுணைந்து செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுப்பதால் தான் கரோனா தொற்று குறைந்துள்ளது. 
அது முழுமையாக அகல மக்கள் இதே போல் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இவ்விழாவில் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், தென் பாரத் சேவா ப்ரமுக் ஆர்.எஸ்.எஸ். கே.பத்மகுமார், திருப்பூர் ஆர்.டி.ஒ. ஜெகநாதன், மருத்துவ துறை இணை இயக்குநர் மருத்துவர் பாக்கியலட்சுமி, துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீசன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தரவேல், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், உகாயனூர் ஊராட்சி தலைவர் ரேவதி கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT