திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தேர்த் திருவிழா: ஒரு நாள் மட்டுமே தேரோட்டம்

13th Jan 2021 05:10 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் 3 நாள்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக் கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா நடத்துவது தொடர்பான அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மலைக் கோயிலில் உள்ள மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் உதவி ஆட்சியர் பவன்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தின் முடிவில், இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலின் உதவி ஆணையர் ஜெ.முல்லை அறிவித்தார்.

ADVERTISEMENT

இதன்படி, சிவன்மலை முருகன் கோயிலில் ஜன.28 ஆம் தேதி துவங்கி 3 நாள்கள் நடைபெறும் தைப்பூச தேரோட்டம், தமிழக அரசின் கரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 28 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிவது உறுதி செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு, வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோயிலுக்குள் பூஜை பொருள்களைக் கொண்டு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்களுக்கு வழங்கப்படும் விபூதி, குங்குமம் ஆகியன பாக்கெட்டுகளில் மட்டுமே வழங்கப்படும்.

மலைக் கோயிலில் வரும் 22 ஆம் தேதி தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. தைப்பூச திருவிழா நாள்கள் முழுவதும் அனைத்து தைப்பூச மண்டபக் கட்டளைகளும் மலைமேல் உள்ள உற்சவருக்கு மட்டுமே நடைபெறும். இதன்போது, அபிஷேகம் பார்ப்பதற்கு கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. தேரோட்டத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 27 அன்று சுவாமி மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் எழுந்தருளுவார். இங்கு நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் மகா அபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும்  பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தேரடி மரியாதைகளும் இல்லை: தேரோட்டத்தின் போது தேரடியில் முக்கிய நபர்களுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும். இம்முறை இந்த தேரடி மரியாதைகளுக்கும் அனுமதியில்லை.

அன்னதானத்திற்கு அனுமதியில்லை: தைப்பூச திருவிழாவின் முக்கிய நாள்களான ஜன.28, 29, 30 ஆகிய 3 நாள்களும் அடிவாரத்தில் மலையைச் சுற்றி காவடிக்குழுவினர் குடில் அமைத்து தங்குவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதியில்லை.

அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்வதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். தவிர, தனியார் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி உண்டு, எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ், காங்கயம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜே.ஜீவிதா, காங்கயம் காவல் ஆய்வாளர் மணிகண்டன்  உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT