திருப்பூர்

மு.க.அழகிரி கட்சித் தொடங்கினால் திமுக உடையும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

7th Jan 2021 06:54 PM

ADVERTISEMENT

மு.க.அழகிரி தனிக்கட்சித் தொடங்கினால் திமுக உடையும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் ஜெயலலிதா பதினைந்தரை ஆண்டுகாலமும், எம்.ஜி.ஆர்.பத்தரை ஆண்டுகாலமும், இவர்களது வழியில் தற்போதைய அதிமுக அரசு நான்கு ஆண்டுகள் என மொத்தம் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. இந்தக் காலகட்டத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய மக்களின் தேவையை அறிந்து செயல்படுத்தும் அரசாக அதிமுக தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது. தமிழக மக்களின் மனதில் இந்த இருவரும் நிறைந்து உள்ளனர். 

இந்த இருவரும் நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த தலைவர்கள். அதேவழியில் அரசும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நானும் விவசாயி என்ற காரணத்தால் அவர்களது 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. துரிதமாக நடைபெற்று இந்தத்திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டில் நிறைவடையும். இதன் மூலமாக இந்தப் பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரப்பட்டு 3 ஆண்டுகளில் கரும்பும், மஞ்சளும், வாழையும் செழித்து வளரும். 

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப்பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,600 ஏக்கரில் ரூ.1,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டர் பால் கொடுக்கும் கலப்பின பசுக்கள் வழங்கப்படும். அப்படி வரும்போது ஊத்துக்குளியில் அதிகமாக வெண்ணெய் உற்பத்தி செய்யப்படும். பால் உற்பத்தி அதிகமாகும்போது வெண்ணெய் அதிகமாகக் கிடைப்பதன் மூலமான இந்தத் தொழில் சிறக்கும் என்றார். 

ADVERTISEMENT

அவர் மேலும் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.  நான் ஏற்கெனவே சொன்னேன் இந்தப் பிரச்னை தொடர்பாக தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் பேசலாம், விவாதிக்கலாம் என்றால் நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெற்றால்தான் வருவேன் என்கிறார். உச்சநீதிமன்றமே அவர்கள் தொடுத்த வழக்கு சரியில்லை என்று தடையாணை பிறப்பித்துள்ளது.அவர் செல்லும் அனைத்து கூட்டங்களிலும் அதிமுக ஊழல், ஊழல் என்றே பேசி வருகிறார். அதிமுக அரசு சட்டரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் டெண்டர் நோட்டிஸ் கொடுத்தவர்கள் மட்டுமே அதை பெட்டியில் போட முடியும். ஆனால் எங்களது ஆட்சியல் இடெண்டர் விடப்பட்டுள்ளது. 

இந்த திறந்த வெளி ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவில் இருக்கும் நபர்கூட இணையதளம் மூலமாக டென்டருக்கு விண்ணப்பிக்கலாம். ஆகவே, இந்த எந்த டெண்டர் சிறந்தது என்பதை மக்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆகவே, வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பேசிவருகிறார் ஸ்டாலின். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 58 பேருக்கு சொத்து வாங்கி வைத்துள்ளார். விவசாயியையும், தொழிலாளியையும் கேலியாகவோ, கிண்டலாகவோ பேசினால் இருக்கின்ற பதவிதான் போகும். அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் எவ்வளவோ திட்டங்களைத் தீட்டினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றதும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார். 

அவர்களும் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். இவர்களை நம்பிச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர்களை ரயில் பெட்டியைப் போல கழற்றிவிட்டுச் சென்று விட்டார். மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார். அவர் கட்சி தொடங்கினார் திமுகஉடையும். எங்களது கட்சியை உடைக்க முடியாது.கருணாநிதியின் மகனான ஸ்டாலினுக்கு உள்ள உரிமை அவர் பெற்ற மற்ற மகன்களுக்கும் உண்டு. அவரது சகோதரரான மு.க.அழகிரிக்கே கட்சியில் பதவி, அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ஒருவர் நாட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும் என்றார். 

இந்த பிரசாரத்தின்போது, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT