திருப்பூர்

நத்தக்காடையூர் அருகே லாரி-சரக்கு வேன் மோதல்

7th Jan 2021 04:31 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பகுதியில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் இருந்து முத்தூருக்கு தக்காளிப் பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. வேனை, காங்கயம் அருகே சாவடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (28) என்பவர் ஓட்டிக் கொண்டு சென்றார். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில், அர்ச்சுனாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே முத்தூரில் இருந்து நத்தக்காடையூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்பகுதி லாரியின் முன் பகுதிக்குள் புகுந்து, உள்ளே சிக்கி நின்றது. லாரிக்கு அடியில், வேனுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் குணசேகரனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

ADVERTISEMENT

இதனையடுத்து, அப் பகுதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி, குணசேகரனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் வேனின் முன்பகுதி முழுக்க சேதமடைந்தது. லாரியின் முன்பக்கமும் சேதமடைந்தது. லாரி ஓட்டுநர் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT