காங்கயம்: கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அருந்ததியர் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் ஆ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ப்ரியா, துணை பொதுச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அருந்ததியர் முன்னேற்றப் பேரவையின் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இந்த அமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலர் ரா.பொன்னுசாமி, மாநில தொழிற்சங்க செயலர் தங்கவேல், ஈரோடு பகுதி பொறுப்பாளர் முருகேசன், மாநில ஓட்டுநர் அணி செயலர் ராசு, மாநில மகளிர் அணி செயலர் சாந்தி, காங்கயம் நகர செயலர் சந்தனக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.