திருப்பூர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

11th Feb 2021 06:50 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் பொதுமக்களிடம் மனு வாங்குவது ஏமாற்று வேலை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், தாராபுரம் புதுகாவல்நிலைய வீதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: திமுகவினர் திட்டமிட்டே தமிழக அரசின் மீது வீண் பழி சுமத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராய் போய் பெட்சீட்டை போட்டு உட்கார்ந்து வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது எங்காவது சென்று குறைகளை கேட்டிருக்கிறாரா? நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டாரே என்ன செய்தார்? மனுவை பெட்டிக்குள் வாங்கி போட்டு 100 நாள்களில் அதை தீர்ப்பாராம் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 

உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆட்சியில் இருந்தபோது ஏன் தீர்க்கவில்லை. ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறாராம். 100 நாள்களில் குறைகளை நிவர்த்தி பண்ணுவதாக கூறுகிறார். ஆட்சியில் இருந்தபோது இதையெல்லாம் செய்யாமல் தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின்போதும் திமுக சார்பில் மனு வாங்கப்பட்டதன் நிலை என்ன என்பதே தெரியவில்லை. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றாலே குறைந்தது ஒரு ஆண்டுகளாகும். திட்டமிட்டு ஒவ்வொன்றையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஸ்டாலின் 100 நாள்களில் நிறைவேற்றுவேன் என்கிறார். நவீன காலத்தில் பெட்டியில் மனு வாங்க வருகிறார். திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, பெட்டியை திறக்கப் போவதும் இல்லை. அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றபட வேண்டிய பிரச்னைகள் இருந்தால் செல்லிடப்பேசி மூலமே சொல்லலாம். 

முதலமைச்சர் சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 10 நாள்களில் தொடங்கப்படும். இதில், 1100 என்று எண்ணுக்கு அழைத்து குறைகளை பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் 38 எம்.பி.க்களை வைத்திருந்த திமுகவால் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் எதையும் வலியுற்தவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யை வைத்துள்ள அதிமுக மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு திட்டங்களைப் பெற்று வருகிறோம். அதிலும் சாலைகள் மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் அதிக நிதியை பெற்றுள்ளோம்.தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு இருந்தது. அதனை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். அதன் விளைவாக உலக தொழிலதிபர்கள் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனையும் நம் ஆட்சியில் துவங்கி வைக்கப்படும். 3 மாதத்தில் முதல்வராக வருவேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவர் எப்படி வரமுடியும். மக்கள் வாக்களித்தால் மட்டுமே முடியும். கரோனா நோய்த் தொற்று காலத்தில் நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு மற்றும் நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.100 ஆவது கொடுத்துள்ளார்களா. உங்கள் ஆட்சி காலத்தில் 100 ருபாய் கொடுத்ததுண்டா?
தாராபுரம் நகராட்சியில் ரூ.14.77 கோடியில் குடிநீர் திட்டம் நிறைவடைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் முதல் தாராபுரம்-அவிநாசி பாளையம் வரை ரூ.715 கோடியில் 70 கிலோ மீட்டர் தொலைவில் போடப்பட்ட சாலை 10 நாள்களில் திறக்கப்படும்.மறைந்த முதல்வர் வழியில் தமிழக அரசு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகதளை நிறைவேற்றி வருகிறது. தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நீரா பானம் இறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் குடிமராமத்து பணி மூலம் அனைத்து ஏரி, குளங்கள் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா மழைநீரை சேமித்து வைப்பதற்கும் தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடு கட்டித்தர அம்மாவுடைய அரசு முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் வீடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.


 

Tags : election campaign
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT