காங்கயம்: தேர்தல் பிரசாரத்திற்காக காங்கயம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு காங்கேயம் காளைகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், காங்கயம் வந்த முதல்வருக்கு நினைவுப் பரிசாக 2 காங்கேயம் காளைகளை காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., வும், அதிமுக ஒன்றியச் செயலருமான என்.எஸ்.என்.நடராஜ் நினைவுப் பரிசாக வழங்கினார். இதன் பின்னர், இந்த 2 காளைகளும் சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த காளைகளை நினைவுப் பரிசாக வழங்கும்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளச்சாமி ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.