காங்கயம்: காங்கயத்தில், காங்கயம் காளைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என காங்கயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் பகுதியில் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டாணா அருகில் அவர் பேசியதாவது:
காங்கயம், கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இந்த வறட்சியான பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும். நீரை வழங்குவதற்கு எங்களுடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மனிதனுக்கு உயிர் எப்படியோ அதுபோல விவசாயிக்கு நீர் முக்கியம். தண்ணீரை நாங்கள் சேமித்து வைத்து, விவசாயிகளுக்கு வழங்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் நீரா பானம் தயாரிக்க எம்முடைய அரசு அனுமதி வழங்கியது.
காங்கயம் ரவுண்டானாவில் காங்கயம் காளைக்கு வெண்கலத்திலான சிலை அமைக்கப்படும். விவசாயிகள் விருப்பப்பட்டால் மாடுகளில் கிடாரியோ அல்லது காளைக் கன்றோ பிறக்கும் வகையில் மருந்துகள் வழங்க ஊட்டியில் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியிருக்கிறோம் என்றார்.
மேலும் சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா உருவாக்கப்படும், இதில் அதிக பால் கொடுக்கும் மாடுகளும், அதிக கறியுள்ள ஆடுகளும் உருவாக்கப்படும், என்றார்.
முன்னதாக காங்கயம்-சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிஏபி பாசன சபை, கீழ் பவானி பாசன சங்கத்தினர், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தினர், அரிசி ஆலை உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கயத்தில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலர் என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் நகரச் செயலர் வெங்கு ஜி.மணிமாறன், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.