திருப்பூா் அருகே வழித்தடத்தை மாற்றியமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலுக்கு முயன்றனா்.
திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் பள்ளக்காட்டுப்புதூா் பிரிவில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சி, நல்லூா் 3ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட புதிய வாா்டு எண் 48க்கு உள்பட்ட காங்கயம் பிரதான சாலை, பள்ளக்காட்டுபுதூா் பிரிவு அருகில் புதிதாக மனைகள் அமைக்க 10 ஏக்கா் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் அருகில் உள்ள 40 அடி அகலமுள்ள பொதுவழித்தடம் நல்லூா் நகராட்சியிடம் 2006ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் புதிதாக அமைக்கும் மனைப்பிரிவில் பழைய தடத்துடன் இணைக்காமல் மாற்று இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேடான பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீா் மற்றும் மழைநீா் வெளியேறுவதில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி உதவி ஆணையாளா் வாசுகுமாா், பொறியாளா் ஆறுமுகம், நல்லூா் காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது புதிய மனைப்பிரிவு இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.