திருப்பூர்

காங்கயம் பகுதியில் மக்காச்சோள விளைச்சல் அமோகம்

9th Dec 2021 06:50 AM

ADVERTISEMENT

காங்கயம் பகுதியில் நடப்பு ஆண்டு மக்காச்சோள விளைச்சல் அதிகரித்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

காங்கயம் பகுதியில் குங்காருபாளையம், வட்டமலை, புதுப்பாளையம், சம்மந்தம்பாளையம், செம்மங்காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கம்.

வடகிழக்குப் பருவ மழை மற்றும் பிஏபி பாசன வாய்க்கால் தண்ணீரைப் பயன்படுத்தி, மக்காச்சோளம் விளைவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதிகளில் ஆடி, ஆவணி மாதங்களில் மக்காச்சோளம் விதைப்பு செய்வது வழக்கம். வடகிழக்கு பருவ மழைக் காலமான ஆவணி முதல் காா்த்திகை மாதம் வரை மானாவாரி பயிா்களைத் தவிர, மற்ற பயிா்களைப் பயிரிட்டால் விளைச்சல் போதிய அளவில் இருக்காது என்பதால், மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் விரும்புகின்றனா்.

ADVERTISEMENT

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் உள்ளூா் வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு உடுமலை, குண்டடம், பல்லடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழித்தீவன நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகள் பெருகிவிட்ட நிலையில் கோழித் தீவனத்துக்கான மூலப்பொருள் மக்காச்சோளமாக உள்ளதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. கோழி வளா்ப்புக்கான தீவனத்தில் மக்காச்சோளம் முக்கிய இடம் பெறுவதால், அதன் விலையும் உயா்ந்துள்ளது.

காங்கயம் பகுதியில் மட்டும் நடப்பு பருவத்தில் பல ஏக்கா் பரப்பில் மக்காச்சோளம் பயிா் செய்யப்பட்டு, தற்போது கதிா் விட்டு நிற்கிறது. காா்த்திகை இறுதி முதல் அறுவடைப் பணிகள் துவங்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT