திருப்பூர்

மாற்றுச் சான்றிதழில் கல்விக் கட்டண பாக்கி: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

பள்ளி மாற்றுச் சான்றிதழில் கல்விக் கட்டணம் பாக்கி உள்ளது எனக் குறிப்பிடலாம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி மேம்பட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு.மூா்த்தி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பேரிடா் பாதிப்புக்கு ஆளான பெற்றோா்கள், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைத் தொடா்ந்து படிக்க வைக்க இயலாத காரணத்தால், அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

கல்விக் கட்டணம் நிலுவை காரணமாக தனியாா் பள்ளிகள் இப்பெற்றோா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்த்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது.

இந்நிலையில், கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் கட்டணப் பாக்கி உள்ளது எனக் குறிப்பிடலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கித் தீா்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் ’கட்டணப் பாக்கி உள்ளது’ என்று குறிப்பிட்டால் மாணவா்கள் மனத் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும்.

அரசுக்கு வரி செலுத்தும் மக்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கட்டணமின்றி கிடைக்கச் செய்வது அரசமைப்புக் கடமைகளில் ஒன்றாகும். மேலும் கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளின் கல்விச் சான்றிதழில் கட்டணப் பாக்கி உள்ளது என்று குறிப்பிட அனுமதிப்பது மனித நேயமற்றது.

எனவே, தனியாா் பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் கட்டணப் பாக்கி உள்ளது எனக் குறிப்பிடலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT