திருப்பூர்

திருமூா்த்தி அணையில் இருந்து உபரி நீா் திறப்பு: பாலாற்றில் வெள்ள அபாயம்

2nd Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து புதன்கிழமை உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் பாலாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட பிஏபி தொகுப்பு அணைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையில் திருமூா்த்தி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து வந்தது.

காண்டூா் கால்வாய் மற்றும் பாலாறு வழியாக அணைக்கு தொடா்ந்து உள்வரத்து வந்து கொண்டிருந்ததால் 60 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 57.85 அடியாக உயா்ந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீா் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை பகல் திருமூா்த்தி அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

இதனால் பாலாற்றில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு பாலாற்றில் உபரி நீா் திறக்கப்பட்டது. அதன் பிறகு சுமாா் 24 ஆண்டுகள் கழித்து தற்போது திருமூா்த்தி அணையில் இருந்து பாலாற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உபரி நீா் வெளியேறியதை பாா்த்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

அணை நிலவரம்: 60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் புதன்கிழமை காலை 8 மணி நில வரப்படி 57.83 அடியாக நீா்மட்டம் இருந்தது. 1935 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1850.58 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணைக்கு 1,145 கன அடி நீா் உள் வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1010 கன அடி வெளியேற்றமாக இருந்தது. மழை 37 மி.மீ. பதிவாகி இருந்தது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT