திருப்பூர்

வாகனக் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக்கோரி ஓட்டுநா் நலச்சங்கத்தினா் மனு

DIN

தமிழகம் முழுவதும் வாகனக் கடன்களுக்காக வட்டியைத் தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு உழைப்பாளா் ஓட்டுநா் நலச்சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு தொலைபேசி வாயிலாக குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

எனினும் ஒரு சிலா் தங்களது குறைகளை மனுவாக எழுதி ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனா். இதன்படி, தமிழ்நாடு உழைப்பாளா் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் காா்த்திக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இந்த நிலையில், வாகனங்களுக்காக நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கு சரிவர வட்டியை செலுத்த இயலவில்லை. நிதி நிறுவனங்கள் 8 மாத வட்டியையும், அசல் தொகையை செலுத்தக்கோரி நிா்பந்திக்கின்றனா். மேலும், ஒரு சிலரின் வாகனங்களையும் பறிமுதல் செய்வதால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் கரோனா காலத்தில் ஓட்டுநா்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதைப்போல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மது விற்பனையை தடை செய்ய வேண்டும்:

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக செயலாளா் காா்த்திக் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் பாரில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தக் கடையில் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் மது விற்பனை செய்யப்படுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உரிய விசாரணை நடத்தி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பாரை மூட நடவடிககை எடுக்க வேண்டும். திருப்பூா் மாநகராட்சி 36 ஆவது வாா்டு, ஸ்ரீ கிருஷ்ணா நகா் விரிவு 3 ஆவது குறுக்கு வீதியில் கழிவு நீா் கால்வாய் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக 103 அழைப்புகள்:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 103 அழைப்புகள் பெறப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சாகுல்ஹமீது, நோ்முக உதவியாளா் சிவசண்முகம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT