திருப்பூர்

ஊதியூர் அருகே அதிகாரியின் கார் டயரின் காற்றைப் பிடுங்கியதாக 19 பேர் மீது வழக்கு: விவசாயிகள் கொதிப்பு

23rd Sep 2020 05:44 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே அதிகாரியின் கார் டயரின் காற்றை பிடிங்கியது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக  விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் 765 கி.வோ துணை மின் நிலையம் முதல் கோயம்புத்தூர் 765 கி.வோ துணை மின் நிலையம் வரை 765 கி.வோ இரு வழி மின் பாதையில் புதியதாக நிறுவப்படும் மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற்று, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே சங்கராண்டாம்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் மின்கோபுரத்திற்கு அடித் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை ஒப்பந்தப் பணியாளர்களுடன் அதிகாரிகள் காரில் சென்று, குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் பலர் அதிகாரிகளிடம், இங்கு வேலை செய்ய மாவட்ட ஆட்சியிரின் அனுமதி கடிதம் வைத்திருக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அனுமதி கடிதத்தை அதிகாரிகள் தரவில்லை எனத் தெரிகிறது, இதையடுத்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முடிந்து, அதிகாரிகள் கிளம்பியபோது, அவர்கள் வந்த காரின் டயரில் காற்று இல்லாதது கண்டு அதிகாரிகள் ஆவேசம் அடைந்தனர்.

இதையடுத்து, இத்திட்டத்தின் உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஊதியூர் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்ட 19 விவசாயிகள் மீது ஊதியூர் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியபோது, முறையான அனுமதி எதுவும் இல்லாமல், விவசாயி காட்டில் வந்து மின் கோபுரம் அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் காட்டில் எங்கள் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் வேலை செய்த போது, அனுமதி இருக்கிறதா எனக் கேட்ட எங்கள் மீது கார் டயரின் காற்றை பிடுங்கி விட்டதாகக் கூறி பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காங்கயம் டி.எஸ்.பி., யிடம் வியாழக்கிழமை (செப்.24) புகார் தெரிவிக்கவுள்ளோம், என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT