திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் பலி: ஆட்சியர் விளக்கம்

DIN

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்த மூதாட்டி உள்பட 2 பேர் மூச்சுத்திணறலால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். எனினும் மின்தடை காரணமாகவே உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டில் திருப்பூர், பி.என்.சாலையைச் சேர்ந்த யசோதா (67), பி.என்.சாலை வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த கௌரவன்(69) ஆகிய இருவரும் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தனர். இந்த இருவருக்கும் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இருவருக்கும் கடந்த திங்கள்கிழமை இரவு முதலே மூச்சுத்திணறல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கட்டட ஒப்பந்ததாரர் செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் மின்சார வயரின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்த சமயத்தில் சிகிச்சையில் இருந்த யசோதா, கௌரவன் ஆகியோர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மின் தடை காரணமாக ஆக்சிஜன் விநியோகம் தடை பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் மின்சார வயரை தொழிலாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதை சரிசெய்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கட்டட ஒப்பந்ததாரர் மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

இந்த சமயத்தில் சிகிச்சையில் இருந்த 2 பேரும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இந்த இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக முதல்வர் திங்கள்கிழமை இரவு சமர்ப்பித்த அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவசர சிகிச்சை பிரிவில்ஆக்சிஜன் தடைபடவில்லை. மற்ற நபர்கள் அனைவரும் நல்ல நிலையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வேளையில் மின்சாரத்தைத் துண்டித்த கட்டட ஒப்பந்ததாரர், சைட் சூப்பர்வைசர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும், கட்டுமானப் பணியின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி டீன், கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை டீன் வள்ளி, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT