திருப்பூர்

காங்கயம் அருகே விவசாயக் கிணற்றில் இரும்பு வடக் கம்பி அறுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

1st Sep 2020 07:01 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே, விவசாயக் கிணற்றில் மோட்டார் பழுது நீக்குவதற்கு இரும்பு வடக் கம்பி மூலம் கிணற்றில் இறங்கும் போது கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காங்கயம் அருகே, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சர்வேயர் தோட்டம் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் பழனிச்சாமி (75). இவரது மகன் ராஜேந்திரன் (47). ராஜேந்திரனுக்கு சிவகாமி என்ற மனைவியும், ராகவி (24) என்ற மகளும், ராகுல் (21) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களின் வீட்டுக்கு அருகே இவர்களுக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மின் மோட்டார் பழுதாகியுள்ளது. இதனைச் சரி செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில், ராஜேந்திரன் மற்றும் அவரது தந்தை இருவரும் கிணற்றில் பொருத்தியிருந்த கிரேன் (இரும்பு வடக் கம்பி) மூலம் கிணற்றில் இறங்கியுள்ளனர். இந்தக் கிரேனை ராஜேந்திரனின் மகன் ராகுல் இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதில், கிரேன் 5 அடி தூரம் உள்ளே சென்ற நிலையில், திடீரென இரும்பு வடக் கம்பி அறுந்து கிணற்றினுள் விழுந்தது. 80 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் 2 அடி மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது. கம்பி அறுந்ததால், இருவரும் 75 அடி உயரத்தில் இருந்து கீழே வேகமாக தலைகுப்புற விழுந்தனர். இதில் தலை, மார்புப் பகுதியில் இருவருக்கும் பலத்த அடிபட்டு, உள்ளே விழுந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காங்கயம் தீயணைப்புத்துறையினர் இருவரையும் மீட்பதற்கு கிணற்றினுள் இறங்கிப் பார்த்தபோது, தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இருவரையும் சடலமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலங்களை காங்கயம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை-மகன் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம், இப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT