திருப்பூர்

அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்துக்கு சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு

1st Oct 2020 04:14 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: பிரதமர் மோடி அறிவித்துள்ள அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் அமைக்கும் திட்டத்திற்கு சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் மேற்கு மண்டல மன்றக் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் மு.தணிகாசலம் தலைமை வகித்தார்.  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளை வளர்க்கத் திட்டமிட்டு செயலாற்றி வருவதுடன், சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்காக அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த இயக்கம் பாராட்டுத் தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

மேலும், இந்த அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தை நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டிலேயே அமைக்க வலியுறுத்தியதோடு, இதற்காக சென்னைக்கு அருகில் இடம் கையகப்படுத்தித் தரப்படும் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் பாராட்டுத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்கில நவீன மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டிருப்பதைப் போல, மாவட்டம்தோறும் சித்த மருத்துவக் கல்லூரிகளையும் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு வேண்டிக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பதிவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகளும், சித்த மருத்துவர்களுமான முத்துக்குமார், பி.கருணாநிதி, குமாரசாமி, பி.தனலட்சுமி, எல்.மனோரஞ்சிதம், வி.என்.சந்திரன், தமிழ்ச்செல்வி, ஆர்.சிவச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT