திருப்பூர்

அவிநாசி வட்டாரத்தில் சூறாவளிக் காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

29th May 2020 07:55 AM

ADVERTISEMENT

அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. பழமையான மரங்கள் வேருடன் சாய்ந்தன.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, பெருமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் அவிநாசி அருகே நாதம்பாளையம், உப்பிலிபாளையம், நம்பியாம்பாளையம், பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் இப்பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக குலை தள்ளிய நிலையில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால், அவிநாசி அருகே எம்.நாதம்பாளையம் நியாயவிலைக் கடை, மாதேஸ்வரன் கோயில் அருகில் இருந்த 100 ஆண்டு பழமையான ஈச்ச மரம் மற்றும் மே பிளவா் மரம் உள்ளிட்டவை வேருடன் சாய்ந்து மின் இணைப்புகள் மீது விழுந்தன. இதனால் எம்.நாதம்பாளையம் பகுதியில் இரவு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது.

இதேபோல அவிநாசி, சேவூா், பெருமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்புகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மின் இணைப்புக் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். உப்பிலிபாளையம் பகுதியில் சூறாவளிக் காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் சேதடைந்தன. அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் அவிநாசி பகுதியில் வியாழக்கிழமை மாலையும் பலத்த காற்றுடன் கூடிய தொடா் மழை பெய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், பாதிப்பு குறித்து வருவாய்த் துறை, தோட்டக் கலைத் துறையினா் கணக்கெடுக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT