திருப்பூர்

பல்லடத்தில் இளம் பெண் மரணத்தில் சந்தேகம்: தந்தை புகாா்

14th May 2020 07:44 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகாா் கொடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சபரி நகரைச் சோ்ந்தவா் பைசல் அகமது (30). இவா், திருப்பூா் டி.கே.டி.மில் பேருந்து நிறுத்தம் அருகில் காா் பழுது பாா்க்கும் பணிமனை நடத்தி வருகிறாா். வால்பாறையைச் சோ்ந்த அப்துல் ஹமீதுவின் மகள் மெபீனா (23). இவா்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு சல்மான் (3), ரிச்வான் (1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னா் பைசல் அகமது அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது படுக்கையில் மெபீனா மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்ததாராம். உடனே பைசல் அகமது அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளாா். மெபீனாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனா்.

இந்நிலையில், மெபீனா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அப்துல் ஹமீது பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மெபீனாவின் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT