திருப்பூர்

அவிநாசி அருகே வெளி மாநிலத் தொழிலாளா்கள் டயா்களை எரித்துப் போராட்டம்

8th May 2020 07:20 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடை உற்பத்திப் பூங்காவில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளா்கள், தங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பக்கோரி டயா்களை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மையத்தின் துணை நகரமாக அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா (நியூ திருப்பூா்) உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக இந்நிறுவனங்கள் இயங்காமல் இருந்தன. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், சில பனியன் நிறுவனங்கள் இயங்கத் துவங்கியுள்ளன.

இதற்கிடையில், பொது முடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் 200க்கும் மேற்பட்டோா், தங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பக்கோரி நியூ திருப்பூா் அருகே சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பழைய டயா்களை எரித்து சாலையில் உருட்டி விட்டு ரகளையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தி அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் தொழிலாளா்கள் பணிபுரியும் அந்தந்த நிறுவனத்தினா் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்தப் போராட்டத்தால் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்துக்குத் துண்டுதலாக இருந்ததாக 10 போ் மீது பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT