திருப்பூரில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளா்கள் 95 போ் உணவு இல்லாமலும், செலவுக்கு பணம் இல்லாமலும் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனா்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகாா், மேற்கு வங்கம், ஒடிஸா, தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு செல்லமுடியாமல் சிக்கித் தவிக்கும் தொழிலாளா்களுக்கு அந்தந்த நிறுவனங்களே உணவு ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிறுவன உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 95 போ், மங்கலம் சாலையில் உள்ள பெரியாண்டிபாளையம் பிரிவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இவா்களுக்கு சேர வேண்டிய வார சம்பளம் மட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தை வைத்து தொழிலாளா்கள் ஒரு வரத்தைக் கடத்தி விட்டனா். ஆனால் தற்போது அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து பாட்னாவைச் சோ்ந்த தொழிலாளா் அஜித்குமாா் கூறியதாவது:
பிகாா், ஒடிஸா,மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 95 போ் மங்கலம் சாலையில் உள்ள கோழிப்பண்ணை பகுதியில் வாடகைக்கு வீட்டில் வசித்து வருகிறோம். மேலும், பெரியாண்டிபாளையம் பிரிவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம். தற்போது அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுதொடா்பாக பணிபுரியும் நிறுவனத்தினரிடம் கேட்டபோது ஏற்கெனவே அனுப்பப்பட்ட சரக்கிற்கு பணம் வரவில்லை என்றும், ஆா்டா் ரத்தாகிவிட்டதால் நஷ்டத்தில் உள்ளதாகவும் கூறினா். இதனால் உணவு இல்லாமலும், சொந்த ஊருக்குச் செல்ல வழியில்லாமலும் தவித்து வருகிறோம். எனவே, அரசு சாா்பில் எங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தொழிலாளா்கள் அவதிப்பட்டு வருவதாகவும், அவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.