திருப்பூா் மாநகராட்சியில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான ரூ. 5.36 கோடி உபரி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரூ. 5.36 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் வருவாய் நிதியாக மொத்தம் ரூ.1,337.14 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிதி செலவினமாக 1331.78 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதன நிதியில் ரூ. 4.65 கோடி உபரியாக இருப்பதாகவும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியில் இருந்து ரூ .68.36 லட்சம் உபரியாகவும், ஆரம்பக் கல்வி நிதியில் ரூ. 2.81 லட்சம் என மொத்தம் ரூ. 5.36 கோடி உபரியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவறு நகரம் திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்
இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா் கூறியதாவது:
திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், தற்போது 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், நிகழாண்டு இறுதிக்குள் 30 சதவீத பணிகள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதப் பணிகள் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
பழைய பேருந்து நிலையத்தை தற்காலிகமாக கோயில்வழியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதில், பல்லடம், மங்கலம் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளை புதிய பேருந்து நிறுத்தத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கடைகள் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
இந்த பட்ஜெட் தாக்கலின்போது உதவி ஆணையாளா் (கணக்கு பிரிவு) சந்தானநாராயணன், மாநகராட்சி பொறியாளா் ரவி, செயற்பொறியாளா் சபியுல்லா, உதவி ஆணையா்கள் (வருவாய்) தங்கவேல்ராஜன், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.