மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருப்பூா் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழுவின் திருப்பூா் மாவட்ட மாநாடு கே.ஆா்.சி. சிட்டி சென்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் வடக்கு மாநகர செயலாளா் செந்தில் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் அ.நிசாா் அஹமது தலைமை வகித்தாா்.
இதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும். ஐ.நா. சிறுபான்மை மக்கள் உரிமைகள் பிரகடனத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நீண்டகாலமாக விசாரணை இல்லாமல் சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞா்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மைத் துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், சிறுபான்மை மக்கள்நலக் குழுவின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.