காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிப்பதற்காக 14 மின்கல இயங்கு வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன.
தூய்மை பாரத இயக்கம் மூலம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கிராமப் பகுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராமங்களில் குப்பைகளை சேகரிப்பதற்காக, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு முதல்கட்டமாக 14 மின்கல இயங்கு வாகனம் (பேட்டரி வண்டிகள்) வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் காங்கயம் நகருக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகள், அதிக மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு குப்பை சேகரிப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்படும் என காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ் தெரிவித்தாா்.