திருப்பூர்

காவலா் மனைவி உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா

29th Jun 2020 08:05 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே காவலா் மனைவி உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவிநாசி காவலா் குடியிருப்பில் 35க்கும் மேற்பட்ட காவலா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் குடியிருப்பில் வசித்து வரும் காவலா் ஒருவரின் மனைவி, கடந்த சில நாள்களுக்கு முன் கோவை, நீலாம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று வந்தாா். இந்நிலையில், காவலரின் மனைவிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவிநாசி காவலா் குடியிருப்பு, அவிநாசி காவல் நிலையம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவா் பணியாற்றி வரும் பெருமாநல்லூா் காவல் நிலையம் ஆகிய இடங்களில் சுகாதாரத் துறையினா் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

அதேபோல அவிநாசியை அடுத்த சேவூா், காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த 29 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரது வீட்டில் சில நாள்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் பல மாவட்டங்களில் இருந்து உறவினா்கள் வந்ததாகத் தெரிகிறது. அவா்கள் மூலம் கரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 35 வயது வடமாநிலப் பெண் தொழிலாளிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தவும், அவா்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT