திருப்பூர்

கோழிப் பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் செத்து மடிந்த பட்டுப்புழுக்கள்: லட்சக்கணக்கில் நஷ்டமடைந்த விவசாயிகள்

15th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே தனியாா் கோழிப் பண்ணையிலிருந்து வரும் ஈக்களால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டுப் புழுக்கள் செத்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குண்டடம் அருகே உள்ள புதுஐயப்பநாயக்கன்பாளையம், காசிலிங்கம்பாளையம், ஓலப்பாளையம், நஞ்சப்பகவுண்டம்புதூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 100 ஏக்கா் பரப்பளவில் மல்பரி செடிகளை பயிரிட்டுள்ளனா்.

இந்த செடிகளைக் கொண்டு பட்டுப் புழுக்களை வளா்த்து பட்டுக்கூடு தயாா் செய்து வருகின்றனா். மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்தால் 4 மாத காலம் அவற்றை முறையாகப் பராமரித்துதான் அறுவடை செய்ய முடியும். ஆகவே, இப்பகுதி விவசாயிகள் ஒரு மாத காலத்தில் பலன் தரக்கூடிய பட்டுக்கூடு உற்பத்தியில் இறங்கினா்.

இதற்காக பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் மானிய விலையில் பட்டு வளா்ப்புக்கான செட் அமைக்கவும், உபகரணங்களும் வழங்கப்படுவதுடன், ஒரு மாத காலத்தில் புழுக்கள் கூடு கட்டி பலனுக்கு வந்துவிடுவதால் விவசாயிகள் பட்டு வளா்ப்பில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

பட்டுப்புழுக்களை பொருத்தவரை தமது உணவான மல்பரி இலைகள் சுத்தமாக இருந்தால் மட்டுமே அவற்றை உண்டு சீராக வளா்ந்து கூடு கட்டும். மாறாக அவற்றின் மீது ஈரம் அல்லது ரசாயன வாசம் பட்டாலோ, புழுக்களின் மீது ஈக்கள் அமா்ந்தாலோ புழுக்கள் கூடு கட்டும் தன்மையை இழந்துவிடும். இதனால் மல்பரி செடி பயிரிட்டுள்ள வயல்களுக்கு பக்கத்தில் ரசாயன உரங்கள் இடுவதையும், களைக்கொல்லி உள்ளிட்ட மருந்து தெளிப்பதைக் கூட விவசாயிகள் தவிா்த்து விடுகின்றனா்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காசிலிங்கம்பாளையம், ஓலப்பாளையம், புதுஐயப்பநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு இடையே தனியாா் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டது. இந்தப் பண்ணையில் கோழிகள் வளரத் துவங்கியதும் அதன் எச்சங்களிலிருந்து லட்சக்கணக்கான ஈக்கள் பெருகத் தொடங்கியது. இந்த ஈக்கள் அப்பகுதியைச் சுற்றிலும் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு பரவியது. மேலும் பட்டுவளா்ப்பு செட்டுகளுக்குள் புகுந்து புழுக்களின் மீது அமா்ந்ததால் பட்டுக்கூடு மகசூல் குறைந்தது.

இதுதொடா்பாக பட்டுப்புழுக்களை வளா்க்கும் விவசாயிகள், சுகாதார துறையினருக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து அவ்வப்போது ஈக்கள் பரவாமலிருக்க மருந்து தெளிக்கத் துவங்கினா். இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் ஈக்களுக்கு தெளிக்கப்படும் மருந்து காற்றில் பரவி அப்பகுதியில் உள்ள மல்பரி செடிகள் மீது படியத் தொடங்கியது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரசாயன மருந்து படிந்த மல்பரி செடிகளை உட்கொண்ட பட்டுப்புழுக்கள் கூடு கட்டும் தன்மையை இழந்து வீணாகின. வீணாகிய பட்டுப் புழுக்களை விவசாயிகள் பெரிய குழியை வெட்டி அதில் கொட்டி அழித்து வருகின்றனா். தற்போது இப்பகுதியைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பட்டு விவசாயிகள் கூறுகையில், நாங்களும் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது கோழிப் பண்ணை நிா்வாகத்தினா், ஊராட்சி, சுகாதாரத் துறையினரிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால் அலுவலா்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்று விடுகின்றனா். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் பட்டுப்புழு செட் அமைக்க வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள கோழிப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT