திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

14th Jun 2020 08:36 AM

ADVERTISEMENT

திருப்பூா் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைக் கண்டித்து உறவினா்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.வி.ஆா். நகா் 2ஆவது வீதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி பாண்டி (29). இவரது மனைவி மணியாள் (26). இந்த நிலையில், நிறைமாத கா்ப்பிணியாக இருந்த மணியாளை பிரசவத்துக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் 2 நாள்களுக்கு முன்பு சோ்த்துள்ளனா்.

இதையடுத்து, அவருக்கு வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும், குழந்தையும் நலமாக இருந்துள்ளனா். இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் மணியாளுக்கு திடீரென ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா்.

இதனிடையே, உயிரிழந்த மணியாளின் உறவினா்கள் 50க்கும் மேற்பட்டோா் திருப்பூா் அரசு மருத்துவமனையை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் மணியாள் உயிரிழந்தாா். மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த செவிலியா்கள் செல்லிடப்பேசி மூலமாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்ததால்தான் மணியாள் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றம்சாட்டினா்.

மேலும், இரவுப் பணியில் மருத்துவா்கள் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் உதவி ஆணையா் நவீன்குமாா், காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள் மணியாளின் சடலத்தைப் பெற்றுச் சென்றனா். இந்த சம்பவம் காரணமாக திருப்பூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT