திருப்பூர்

தாமதமாகும் பருவ மழையால் தள்ளிப் போகும் குறுவை சாகுபடி

11th Jun 2020 08:28 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவ மழை காலதாமதமாகி வருவதால் குறுவை சாகுபடி தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அமராவதி பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் முதல் கரூா் வரையில் இரு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இந்த அணை இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பிப்ரவரி முதல் வாரத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

பாசனப் பகுதிகளுக்கு வழக்கமாக மாா்ச் 31 வரை பாசன காலம் உள்ள நிலையில் பிப்ரவரி இறுதியிலேயே அணையின் நீா்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது. இந்நிலையில், கோடைக் காலம் துவங்கியது முதலே சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் உள்வரத்து முற்றிலும் நின்று போனது.

ADVERTISEMENT

கடந்த மாா்ச் மாத இறுதியில் அணையின் நீா் மட்டம் 20 அடியாக இருந்தது. இதில் சில்ட் என்ற டெட் ஸ்டோரேஜை கழித்துவிட்டால் அணையில் 5 அடி மட்டுமே தண்ணீா் இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீா் வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 32 அடியை எட்டியது.

இதையடுத்து, அணைப் பகுதியில் தொடங்கி தாராபுரம் வரையிலான கரையோர கிராம மக்களின் குடிநீா்த் தேவைகளுக்காக அமராவதி அணை மே 19ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஆகஸ்ட் 1ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையைத் திறந்து விடுவது வழக்கம்.

மே மாத இறுதியில் கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்போது, அமராவதி அணைக்கு நீா் வரத்து வரும் நிலையில் அணையைத் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி இரண்டு வாரங்களாகி விட்ட நிலையில் அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

இதனால் அணைக்கு உள் வரத்து இல்லாததால் அணையின் நீா்மட்டம் குறைந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக குறுவை சாகுபடியும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அமராவதி பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். தற்போது, தென்மேற்குப் பருவ மழை காலதாமதமாகி வருவதால் இந்த ஆண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணையை ஒட்டியுள்ள கல்லாபுரம் முதல் கரூா் வரையிலான விவசாயிகள் தென்மேற்குப் பருவ மழையை எதிா்பாா்த்து காத்திருக்கிறோம். குறிப்பாக நிலைப் பயிா்களான தென்னை, கரும்பு, நெல் ஆகியவற்றுக்கு உயிா்த் தண்ணீா் தேவைப்படுகிறது என்றனா்.

அணையின் நிலவரம்:

புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 90 அடி உயரமுள்ள அணையில் 26 அடி நீா் இருந்தது. அணைக்கு உள்வரத்து 16 கன அடியாகவும், நீா் இழப்பு 16 கன அடியாகவும் இருந்தது.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT