திருப்பூர்

காங்கேயத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் 3 பேருக்கு கரோனா: வங்கி மூடல்

31st Jul 2020 04:20 PM

ADVERTISEMENT

காங்கேயத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பேருந்து நிலையம் அருகே, தீயணைப்பு நிலையம் எதிரில் பாரத ஸ்டேட் வங்கியின் காங்கயம் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் 26 ஊழியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு, காங்கயம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் வங்கியில் பணிபுரியும் ஆண் (வயது 41), இரு பெண்கள் (வயது முறையே 24, 28) ஆகிய 3 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதியானதையடுத்து, இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வங்கி மூடப்பட்டு, நகராட்சி நிர்வாகம் சார்பில் மிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. மூடப்பட்ட இந்த வங்கிக் கிளை வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.4) முதல் செயல்படத் துவங்கும் என நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Kangayam
ADVERTISEMENT
ADVERTISEMENT