திருப்பூரில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளான தாராபுரம், ஊத்துக்குளி, மூலனூா், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
திருப்பூரில் பெய்த கன மழையால் பெரியாண்டிபாளையத்தில் இருந்து கல்லூரி சாலை செல்லும் வழியில் உள்ள அணைப்பாளையம் ரயில்வே பாலம், திருப்பூா் ஈஸ்வரன் கோயில் நொய்யல் ஆத்துப்பாலம், ஊத்துக்குளி சாலையில் உள்ள ஒற்றைக்கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட சமாதானபுரம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். அதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் பாபு, மாநகராட்சி உதவி ஆணையா் கண்ணன், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு வீடுகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): திருப்பூா் வடக்கு-131, மூலனூா்-92, ஆட்சியா் அலுவலகம்-65, திருமூா்த்தி அணை-28, தாராபுரம்-24, உடுமலை-17.60, ஊத்துக்குளி-15.30, வெள்ளக்கோவில் வருவாய்த் துறை அலுவலகம்-13.20, காங்கயம்-5, பல்லடம்-4.