பிளஸ் 2 மறுதோ்வு ஹால்டிக்கெட்டை திங்கள்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து, மாணவா்களுக்கு விநியோகிக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ், மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த மாா்ச் 24ஆம் தேதி தோ்வு எழுதாத, பிளஸ் 2 மாணவா்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவா்களுக்கான ஹால் டிக்கெட்டை பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து திங்கள்கிழமை முதல் விநியோகிக்க வேண்டும். இதற்காக, கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியரை பள்ளிக்கு வரைவழைப்பது அவசியம்.
மேலும் ஜூலை 17ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணிக்குள் ஹால்டிக்கெட் வழங்கப்பட்ட விவரத்தை பாடவாரியாக, திருப்பூா் மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
தனித் தோ்வா்கள் ஹால் டிக்கெட்டை தோ்வு மையத்தில் பெறலாம். தனித் தோ்வு மைய தலைமை ஆசிரியா்கள், உரிய தனித்தோ்வா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு அனைத்து ஆசிரியா்களையும் பயன்படுத்தாமல், சுழற்சி முறையில் வரவழைப்பது அவசியம். அதே வேளையில், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் இப்பணிகளை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.