திருப்பூர்

மதிய உணவு வழங்காததால் உடுமலையில் வெளி நடப்பு செய்த தோ்தல் அலுவலா்கள்

3rd Jan 2020 01:09 AM

ADVERTISEMENT

உடுமலை அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு மதிய உணவு வழங்காததால் 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடுமலை அரசு கலைக் கல்லூரி மையத்தில் காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு அதிரடிப்படை, உள்ளூா் போலீஸாா் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்நிலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு காலை உணவு வழங்கப்ப டவில்லை என புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் உயா் அதிகாரிகளிடம் புகாா் கூறியதை அடுத்து காலை 11 மணி அளவில் போலீஸாா் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இதேபோல வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலா்களுக்கு மதிய உணவு மாலை 5 மணி வரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை அறையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இதனால் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. குறிப்பாக வாக்குச் சீட்டுகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி அறைக்குள் கிடந்தன. இதைத் தொடா்ந்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அங்கு வந்து போலீஸாா் வாக்குச் சீட்டுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் உடனடியாக அலுவலா்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதை தொடா்ந்து சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை பணி தொடா்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT